‘கேள்வி கேட்கும் குழந்தையே, அறிவின் விதையை விதைக்கும் விவசாயி’ என்று சொல்வது உண்டு. உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது ‘கேள்வி’ கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது.
குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், ‘பெரியவர்களும் ஆசிரியர்களும்தான் கேள்விகள் கேட்பார்கள்; பதில் சொல்வது குழந்தைகள், மாணவர்களின் பொறுப்பு’ என்கிற எழுதப்படாத விதி ஒன்று இங்கே இருப்பதுதான். அதனால், கேள்வி கேட்க நினைக்கும் மாணவர்களின் இயல்பான ஆர்வம் தொலைந்துவிடுகிறது.
உங்கள் கைகளில் தவழும் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ இரண்டாம் பாகம், வெறும் புத்தகம் அல்ல. இது ஓர் அறிவியல் களஞ்சியம். இந்து தமிழ் திசை ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதியில் கேட்கப்பட்ட அற்புதமான கேள்விகளின் தொகுப்பு இது.